Tuesday, July 7, 2009

வாய்க்கரிசி திருடும் ம.க.இ,க --ஸ்டாலின் குரு

ஈழம் : வாய்க்கரிசி திருடும் ம.க.இ,க வும்,வர்க்கபார்வவையும்

ஏகாதிபத்திய சூழலில் இறையாண்மையுள்ள ஒரு முதலாளித்துவ நாட்டில்,வாழ்வியல்,அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அரசின் எல்லைக்குள் வாழும் தேசிய இனம் நடத்தும் விடுதலை போராட்டத்துக்கு ஒரு பக்கத்து நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி என்கிற முறையில் ஆதரவை மட்டுமே வழங்க முடியும் தீர்வுகளை அல்ல என்று முழங்கிய மக இக வினர்,ஒட்டுமொத்த இலங்கைக்குள் புரட்சி நடத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வை முன்வைப்பதன் மூலம் தங்கள் கருத்தோடு தாங்களே முரண்படும் கேலிக்கூத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகையில் இன்னொரு கேள்வியும் எழுகிறது.


இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்து சென்றாலொழிய இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் தன்னுணர்வு பெறுவதோ வர்க்க போராட்டத்தில் ஈடுபடுவதோ சாத்தியமற்றது என்பதால் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்தார் மார்க்ஸ்,இலங்கையில் இன்றைய சூழலும் இதுவாகத்தான் இருக்கிறது.

மார்க்சுக்கே மார்க்சியம் தெரியாது போல இருக்கிறது இவர்களின் கூற்றுப்படி.

ஏகாதிபத்திய சூழல் பற்றியும்,ஈழ தேசிய விடுதலையின் இயல்பு பற்றியும்,நாம் தொடர்சியாக இவர்களின் கருத்துகளுக்கு காத்திரமான எதிர்வினைகளை அளித்துவிட்டதால் அதனுள் மீண்டும் போக தேவையில்லை.

பேரழிவு - பின்னடைவு ஏன் ? என்கிற பெயரில் தங்கள் இதழான புதிய ஜனநாயகத்தில் இவர்கள் கட்டுரை என்கிற பெயரில் எழுதியிருக்கும் அபத்த களஞ்சியத்தின் மீதான எதிர்வினையூடாக நாம் நமது ஈழ தேசிய விடுதலை போராட்டம் பற்றிய புரிதலை விரிவுபடுத்திக்கொள்ள முயலலாம்.
கடந்த சில மாதங்களாக உலக ஏகாதிபத்திய சக்திகளும், பிராந்திய துணை வல்லரசாக தன்னை நிறுவிக்கொள்ள துடித்துகொண்டிருக்கும் இந்தியாவும்,ஈழ தமிழி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ஈவு இரக்கமற்ற படுகொலைகளை கண்டிக்கும் முகமாக ஆரம்பிக்கும் கட்டுரை, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் புலிகளுக்கு ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்பதாக ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திருக்கிறது.

மூன்று சதுர கி,மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில்,தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட நிலையிலும் "துப்பாக்கிகளை மவுனிக்க செய்வது" என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பதாக அடுத்த கண்டுபிடிப்பையும் முன்வைக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விடுத்த போர்நிறுத்த கோரிக்கையை ராஜபக்சே அரசு நிராகரித்துவிட்டு கொத்துகொத்தாக மக்களையும் புலிகளையும் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வரும் நிலையிலும், டெல்லியில் ஏற்ப்படும் ஆட்சி மாற்றம் போர் நிறுத்தத்தை மறுகணமே கொண்டுவந்துவிடும் என்று அவர்கள் நம்பியதாக சொல்லி செல்கிறது.

தமிழினவாதிகள் எதிர்பார்த்ததுபோல தேர்தலில் ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா என்றொரு அதிபுத்திசாலித்தனமான கேள்வியையும் முன்வைக்கிறது கட்டுரை.


சில நாட்களுக்கு முன்னால் பிரபாகரன் அவர்கள் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அவர்களுக்கு ஈழ விடுதலை போர் தீவிரமான் காலகட்டத்தில் இருந்தபோது அளித்த நேர்காணலை மீள்வாசிப்பு செய்ய நேர்ந்தது.

இன்றைக்கு இந்திய உதவிகளையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டாலும் இந்தியாவுடன் நாங்கள் என்றைக்காவது மோதித்தான் ஆக வேண்டும் என்று குறிபிட்டிருக்கிறார் பிரபாகரன் அந்த நேர்காணலில், ஈழ தமிழர்கள் விவகாரத்தில் தனது ராணுவ பொருளியல் நலனை முன்வைத்து இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் தங்கள் விடுதலை போருக்கும் முரண்பாடுகள் விளைந்தே தீரும் என்பதையும்,மட்டுமல்லாமல் தங்கள் விடுதலை போராட்டம் தாய் தமிழக மக்களிடம் தேசிய இன உணர்வை விதைத்துவருவதை இந்தியா விரும்பாது என்பதையும் அன்றைக்கே மிக தெளிவாக புரிந்துகொண்ட புலிகளின் தலைமையை ஏதோ அரசியல் அறிவே இல்லாத சிறுபிள்ளைகள் போல சித்தரிபதன் மூலம்,

ஈழ விடுதலை போர் தமிழகத்தில் கிளப்பிவிட்டிருக்கும் தேசிய இன தன்னுணர்வின் மீதான தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொண்டிருக்கின்றனர் இந்த அற்பவாதிகள்.


கிளிநொச்சி போர் காலகட்டத்திலேயே தங்கள் மரபு ரீதியான படையணிகளை புலிகள் கலைத்துவிட்டனர் என்கிற விசயததை வசதியாக மறைத்துவிட்டு,மூன்று இலட்சம் மக்களை தங்களுக்கான கேடயமாக பயன்படுத்திக்கொண்டு, இந்திய தேர்தல் முடிவுகள் தங்களை காப்பாற்றும் என்று நம்பி தேர்தல் முடிவுகள் வரை போரிட்டதன் மூலம்,மக்களுக்கும் தங்களுக்கும் பேரழிவுகளை விடுதலைப்புலிகள் விளைவித்துகொண்டதாக சொல்லி செல்கிறது கட்டுரையின் பின்பகுதி.


ஒரு நேர்மையான விமர்சனத்திற்கான எந்த அடையாளத்தையும் ஆரம்பித்திலிருந்தே கொண்டிராத இந்த கட்டுரையில்,தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை முன்னிறுத்தி செயல்பட்டதை மட்டுமே முன்னிறுத்தி,

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக ஈழ ஆதரவாளர்களால் தொடர்சியாக நிகழ்த்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக எழுந்த உணர்வை பணத்தின் மூலம் முறியடித்து தேர்தல் வெற்றியை சாதித்துகொண்டவர்கள் பற்றி சாதிக்கும் சதிதனமிக்க மௌனத்தையும்,


போரில் இறுதி நாட்களில் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களையே இலங்கை ராணுவத்தினர் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் மனித கேடயங்களாக பயன்படுத்தியதை இவர்கள் மறைப்பதையும்,


இலங்கை ராணுவத்தின் கட்டுபாட்டு பகுதிக்குள் இன்றைக்கு வந்திருக்கும் தமிழர்கள் மீது, இளைஞர்களை கடத்தி கொல்வது,பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பசியிலும்,பட்டினியிலும், அவலத்திலும் மக்களை தவிக்க விடுவதன் மூலம் அவர்களை அடிமைகளாக மாற்ற முயற்சிப்பது என்று சிங்கள் இனவாத அரசின் செயல்களை அறியவருபவர்களுக்கு
புலிகள்தான் மக்களுக்கு கேடயமாக இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளவும் உலக மேலாதிக்க சக்திகளின் நலன்களையே இந்த கட்டுரை முன்வைத்து செல்கிறது என்பதையும் அறிந்துகொள்வதில் சிரமிருக்க போவதில்லை.


புலிகள் இயக்க தளபதிகளும் தலைவர்களும் கொல்லபட்டுவிட்டதால் ஈழ விடுதலை போராட்டம் தலைமையின்றி தவிப்பதாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் பரப்பும் வதந்தியையே வாந்தி எடுத்து,ஈழ விடுதலை போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணிகளை ஆராய புகுகிறது கட்டுரை.


தங்கள் ராணுவ பொருளியல் நலன்களின் அடிப்படையில் ஈழ விடுதலை போரையும்,விடுதலை புலிகளையும் ஒடுக்க சாத்தியமான எல்லா வகைகளிலும் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்த இந்தியா உள்ளிட்ட உலக ஏகாதிபத்திய சக்திகள் போரில் நிகழ்த்திய தீர்மானகரமான தாக்கத்தை புறங்கையால் ஒதுக்கிவிட்டு,


இந்த பின்னடைவுக்கு காரணம் புலிகள் மேற்கொண்ட அரசியல் பிழைகள்தான் என்று ஒட்டுமொத்த பழியையும் புலிகள் மீது சுமத்தும் இந்த அதிமேதாவிகள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அரசுடன் பகைத்துகொள்ளாமல் தாஜா செய்து இந்திய உளவுபிரிவினரான ராவிடம் ஆயுதங்களும் பயிற்சியும் பெற்று,இஸ்லாமியர்களை விரட்டியும்,அப்பாவி சிங்கள மக்களை கொன்றும்,இதர போராளிக்குழுக்களை அழித்தும் புலிகள் தங்களை ஏகபோக சர்வாதிகாரிகளாக நிருவிகொண்டதாக் குற்றம் சுமத்துகிறது.


மிக இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் நடத்தும் பயங்கரவாத புலிகளுக்கு எதிரான போர் எங்களுக்கு மட்டுமானதல்ல, இந்தியாவுக்காகவும்தான் என்கிற ராஜபக்சேவின் கருத்தை வெளியிட்டிருக்கும் இவர்கள்,


இந்தியாவின் உதவிகளை பெற்று இந்திய நலன்களின் அடிப்படையிலேயே போராட்டத்தை நடத்தியதாக இவர்களால் சித்தரிக்கப்பட்ட புலிகளை இந்தியா ஏன் அழித்தொழிக்க விரும்பியது என்பதற்கான காரணத்தை ஆராய புகாமல் கம்பிநீட்டியதன் காரணம் நமக்கு புரியவே செய்கிறது.

பேச்சளவில் ஏகாதிபத்தியங்களோடு சமரச போக்கை வைத்துக்கொண்டு செயலளவில் எந்த விட்டுகொடுப்புகளுக்கும் புலிகள் தயாராக இல்லை என்பதாலேயே,அமெரிக்க,ஐரோப்பிய,ஜப்பான்,இந்திய,பாகிஸ்தான்,சீனா, போன்ற நாடுகள் புலிகளை ஒழிக்க முனைந்தன என்பதை பேச்சளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் செயலில் ஏகாதிபத்திய ஆதரவையும் கடைப்பிடிக்கும் ,புலிகளை அரசியல் மூடர்கள் என்று விளிக்கும் இந்த மூடர்களின் நேர்மை பற்றி நமக்கு சந்தேகங்கள் எழும்புவது தவிர்க்கப்பட முடியாதது.

இலங்கையின் புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் விரமபாகு கருணாரத்ன தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபிறகு புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய அரசியல் ஒருங்கிணைவு நிகழ்வில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதை குறிப்பிட்டு, வெறும் ஆயிரம் ரெண்டாயிரம் பேரைத்தான் தலையாட்டிகளாக மாற்ற முடியும் இத்தனை மக்களை தலையாட்டிகளாக அணிதிரட்டுவது என்பது சாத்தியமில்லை என்றதையும்,மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் இல்லை என்கிற பஜனை பாடும் இவர்கள் அவரின் இந்த கருத்தை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு புரிந்துதான்.

இது புலிகள் தங்கள் போராட்டத்தின் திசைவழிகளை தொடர்ந்து மீள் ஆய்வு செய்வதையும் இனி அவர்களின் வருங்கால போராட்ட முறைகள் பற்றிய ஒரு முன்னறிவப்பையும் நமக்கு அளிக்கிறது,

இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் ஈழம் தொடர்பான அரசியலை அவதானிக்கிற எல்லாராலும் புரிந்துகொள்ளப்பட கூடிய விசயமாகத்தான் இது இருக்கிறது.

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்த காலத்திலும் உணர்ந்ததில்லை என்று கூறும் இவர்கள் ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் கட்டிய மக்கள் இயக்கங்களையும் அதன் மூலம் விளைந்த தாக்கத்தையும் நமக்கு சொன்னால் நல்லது.

சந்தர்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொன்டதாக புலிகளை சித்தரித்து புலிகளின் அர்பணிப்பு மிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் பற்றியும் ஈழ விடுதலையின் முற்போக்கு அம்சம் பற்றியும் தமிழகத்தில் இருக்கும் பரவலான ஈழ ஆதரவாளர்களிடமும் முற்போக்கு சக்திகளிடமும் சந்தேகங்களையும் சலனங்களையும் ஏற்படுத்த முனையும் மார்க்சியத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும் சக்திகளை அம்பலபடுத்தாமல் ஈழ
விடுதலை சாத்தியமில்லை
நன்றி--- ஸ்டாலின் குரு

Monday, July 6, 2009

ஈழத்து நண்பர்கள்

புலம் பெயர்ந்த

என் ஈழத்து நண்பர்களை

இப்போது நான் சந்திப்பதில்லை



அவர்களது மின்னஞ்சல்களை

நான் திறப்பதில்லை



கணினியின் உரையாடல் அறையில்

அவர்களது வணக்கங்களுக்கு

இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை



வரலாற்றில் இதற்கு முன்பும்

இது போல்தான் இருந்ததா

அழிவின் மௌனங்கள்?

*

நிறைய பார்த்தாகிவிட்டது

சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை



நிறைய காண்பித்தாகிவிட்டது

படுகொலைகளின் படச்சுருள்களை



நிறைய படித்தாகிவிட்டது

கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை



வரலாற்றில்

இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா

விடுதலையின் கதைகள்?

*

முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம்

ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி

இப்போது ஒரு கண்ணீர்த்துளியாக

எஞ்சி விட்டது



தோழி

நாம் இன்று அருந்துகிற

ஒவ்வொரு கோப்பை மதுவும்

உன் விடுதலைக்காக இறந்தவர்களின்

குருதியால் நிரம்புகிறது



அது மரணத்தின்

எல்லையற்ற போதையை

நம் இதயத்தில் கலக்கிறது



வரலாற்றில் இதற்குமுன்பும்

இப்படித்தான் அணைந்ததா

விடுதலையின் சுடர்கள்?

*

கொலைகாரர்கள்

தன்னம்பிக்கையுடன்

இறுதி வெற்றியை நோக்கி

முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்



சாத்தான்கள்

மர்மப் புன்னகையுடன்

வேறு எங்கோ பார்த்தபடி

பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன



நீதி தேவதைகளோ

இதைப்பற்றிய தகவல்கள்

இன்னும் தமக்கு வரவில்லை என்கின்றனர்



வரலாற்றில்

இதற்கு முன்பும்

கொலைக்களங்களில் மனிதர்கள்

இப்படித்தான் கைவிடப்பட்டார்களா?

*

வெவ்வேறு தலைநகரங்களில்

கண்டன ஊர்வலங்கள் நிறைவுற்று

தனிமையின் இருளில்

என் ஈழத்து நண்பர்கள் வீடு திரும்புகிறார்கள்



அரசியல் சூதாடிகள்

தங்கள் சீட்டுக் கட்டுகளை

கலைத்துக் கலைத்து அடுக்குகிறார்கள்



நான் ஒரு கூட்டுப் பிரார்த்தனையில்

பங்கெடுத்துவிட்டு

சாலையோரம் அமர்ந்து மூத்திரம் போகிறேன்



வரலாற்றில்

இதற்குமுன்பும் இப்படித்தான்

சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டதா?

*

அமைதிக்குப்பின்

கருணை எல்லா முனைகளிலும்

ரத்து செய்யப்படுகிறது



புதுப்பிக்கப்படாத விஸாக்கள்

நிறுத்தப்படும் உதவித் தொகைகள்

காலி செய்யப்படும் அகதி முகாம்கள்

எங்கும்கொண்டு சேர்க்காத திரும்பும் பாதைகள்



மயான பூமியை நோக்கிக்

கிளம்புகிறது

இறுகிய முகங்களுடன்

சமாதானத்தின் மரணக் கப்பல்



வரலாற்றில் இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள்

இதற்குமுன்பு எப்போதாவது பறவைகளாக மாறி

வனாந்தரங்களுக்குள் பறந்து சென்றிருக்கிறார்களா?

*

புலம் பெயர்ந்த

என் ஈழத்து நண்பர்கள்

இப்போது கொல்லப்பட்டவர்களை

நினைவுகூர்வதில்லை



நம்பிக்கையூட்டும்

வதந்திகள் எதையும்

நம்புவதில்லை



யுத்தமுனைச் செய்திகளைப்

படிப்பதில்லை



அவர்கள் ஒரு பைத்தியக்காரனின் முகத்தை

சுவரில் வரைகிறார்கள்

குழந்தைகளின் இதயத்தைத்

தின்பவனின் பெயரை

சுவரில் எழுதுகிறார்கள்

ஒரு அபத்த தியாகத்தின் கதையை

எஞ்சியிருக்கும் தம் குழந்தைகளுக்குச்

சொல்லாமல் மறைக்கிறார்கள்



வரலாறு

இதற்குமுன்பும் இப்படித்தான்

ஒரு பைத்தியக்காரவிடுதியாக இருந்ததா?